< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: ரோகித், விராட் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது - மஞ்ச்ரேக்கர்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ரோகித், விராட் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது - மஞ்ச்ரேக்கர்

தினத்தந்தி
|
29 May 2024 3:04 PM IST

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மெதுவாக விளையாடிய தவறை ரோகித் சர்மா மீண்டும் செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கடைசியாக தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றது. அதன் பின் பல தரமான வீரர்களுடன் களமிறங்கியும் இந்தியா 2-வது கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஐ.சி.சி. தொடர்களில் லீக் சுற்றில் அபாரமாக செயல்படுகின்றனர். ஆனால் முக்கியமான நாக் அவுட் சுற்றில் அவர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறுவது ஐசிசி தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்து வருகிறது.

இந்நிலையில் 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மெதுவாக விளையாடிய தவறை ரோகித் சர்மா மீண்டும் செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல அப்போட்டியில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததுபோல் நாக் அவுட் போட்டிகளில் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவதற்கு பதிலாக அதிரடியாக விளையாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "கடந்த டி20 உலகக்கோப்பையில் அடிலெய்ட் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக முதல் 10 ஓவர்களில் அவர்கள் 62 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் அதிக பந்துகளை எதிர்கொண்டனர். ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அங்கேயே இந்தியா தோல்வியை சந்தித்தது.

நல்ல வேளையாக ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து இந்திய பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே ரோகித் - விராட் ஆகியோர் அரையிறுதியில் அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இருப்பினும் தற்போது அதிகப்படியான வெளிப்புற விமர்சனங்களால் 2 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட விராட் கோலி முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அவர் நங்கூரமாக விளையாடுவதை விட வேகமாக பேட்டிங் செய்ய முயற்சிக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்