டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்
|இன்று நடைபெறும் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதுகிறது.
நியூயார்க்,
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேசத்தை நியூயார்க் நகரில் இன்று சந்திக்கிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று தான் இந்திய அணியுடன் இணைந்தார். இதனால் அவர் உடனடியாக ஆடுவாரா என்பது சந்தேகம் தான். மற்ற 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். பயிற்சி ஆட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என்பதால் 14 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.
தொடக்க ஆட்டத்திற்கு சரியான ஆடும் லெவன் அணியை கண்டறிய இந்த பயிற்சி போட்டி உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இதற்கு முன்பு இந்திய அணியினர் நியூயார்க்கில் விளையாடியதில்லை. அதனால் அங்குள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியம். இங்குள்ள சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய அணி வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.