டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; நமீபியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா
|ஆஸ்திரேலியா தரப்பில் டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்தார்.
டிரினிடாட்,
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த தொடரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிரினிடாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.
நமீபியா தரப்பில் அதிகபட்சமாக ஜேன் க்ரீன் 38 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் டேவிட் வார்னர் 21 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.