டி20 உலகக்கோப்பை; பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பலவீனமாக உள்ளது - இந்திய முன்னாள் வீரர்
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி அயர்லாந்தையும், 9ம் தேதி பாகிஸ்தானையும், 12ம் தேதி அமெரிக்காவையும், 15ம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இதுவரை நடைபெற்று இருக்கும் ஐ.சி.சி உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி ஒரே முறை மட்டும் (2021-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. அப்பொழுது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்கள். பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பக்கார் ஜமான் மட்டுமே கொஞ்சம் வேகமாக விளையாடுகிறார். இறுதிக்கட்டத்தில் இப்திகார் அகமது கொஞ்சம் வேகமாக விளையாடுகிறார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே 125 ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடுகிறார்கள். அவர்களின் பேட்டிங் எந்த வகையிலும் பயமாக இல்லை. ஆனால் பந்துவீச்சுதான் பயமாக இருக்கிறது. அவர்களிடம் ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் இருக்கிறார்கள். நசீம் ஷா இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரை காயத்தால் தவறவிட்டார். தற்பொழுது அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார். ஆடுகளமும் பவுன்ஸ் கொண்டதாக இருக்கும்.
பாகிஸ்தான் எந்த பார்மில் வந்தாலும் கவலை இல்லை. அவர்கள் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்துதான் வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் வரலாறு எங்களுக்கு தெரியும். அவர்கள் திடீரென்று ஏதாவது செய்வார்கள். கடந்த முறை கூட அவர்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தார்கள்.
மேலும் நியூயார்க் மைதானம் திறந்தபடி இருக்கின்ற காரணத்தினாலும், ஆடுகளம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளம் போல பவுன்ஸ் கொண்டதாக உருவாக்கப்பட்ட்டு இருப்பதாலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக ஸ்விங் செய்து வீசுவார்கள். இந்திய அணியின் பக்கம் பும்ரா இருக்கிறார். மேலும் சிறந்த சுழல் பந்து வீச்சு தாக்குதல் இருக்கிறது. குல்தீப் யாதவ் சிறப்பாக இருப்பார். எனவே இந்தப் போட்டி சம நிலையில் தற்போது இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.