டி20 உலகக்கோப்பை: ரிஷப் பண்ட், பாண்ட்யாவுக்கு இடமில்லை...புது முகங்களுடன் அணியை அறிவித்த ராயுடு
|டி20 உலகக்கோப்பை தொடருக்காக, தான் தேர்வு செய்த இந்திய அணியை அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.
மும்பை,
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.
அதேபோல 38 வயதில் பெங்களூரு அணியில் அசத்தும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக்கும் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்து டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடி வரும் ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பராக உலகக்கோப்பையில் விளையாட அதிகப்படியான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். அதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதில் ரிஷப் பண்ட்டை கழற்றி விட்டுள்ள அவர், தினேஷ் கார்த்திக்கை கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும் ஹர்திக் பாண்ட்யாவை தேர்வு செய்யாத அவர் நடப்பு ஐ.பி.எல். சீசனில் அசத்தி வரும் இளம் வீரர் ரியான் பராக்கை தேர்வு செய்துள்ளார். மேலும் ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு அளித்துள்ள அவர், லக்னோ அணியில் அறிமுகமான புது முக வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவை அணியில் தேர்ந்தெடுத்து ஆச்சரியம் அளித்துள்ளார்.
ராயுடு தேர்வு செய்த இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரியான் பராக், ரிங்கு சிங், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.