டி20 உலகக் கோப்பை: வெளியேறியது நமிபியா- சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து முன்னேற்றம்
|நமிபியா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றது.
கீலாங்,
8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் முதல் சுற்று போட்டியில் குரூப் 'ஏ' வில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இன்று நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் இலங்கை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் நமிபியா அணி ஐக்கிய அரபு அமீரக அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் நமிபியா அணி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் நெதர்லாந்தை பின்னுக்கு தள்ளி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் நிலை இருந்தது. அதே போல் இன்று நமிபியா தோல்வி அடைந்தால் நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இந்த நிலையில் இப்பூடியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது வாசிம் 50 ரன்கள் எடுத்தார்.
இதை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்து சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் முனைப்பில் நமிபியா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. மைக்கேல் வான் (10 ரன்கள்), ஜான் நிகோல் (1 ரன்கள்) கேப்டன் ஏரஸ்மஸ் (16 ரன்கள்) ஸ்மிட் (3 ரன்கள்) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 69 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் விசா- ட்ரம்ப்பில்மன் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக அதிரடியாக விளையாடிய விசா 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பரபரப்பான இந்த போட்டியில் இறுதி ஓவரில் நமிபியா அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் நமிபியா அணி 2 புள்ளிகளுடன் முதல் சுற்றை நிறைவு செய்து சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்த நமிபியாவுக்கு இந்த தோல்வி அதிர்ச்சியாக அமைந்து உள்ளது. இதன் மூலம் நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணியின் குரூப்பில் இடம்பெற்றுள்ளது.