டி20 உலகக்கோப்பை: ஐ.சி.சி.-யை விமர்சித்த மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாபர்
|மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் நியூயார்க் மைதானம் குறித்து ஒரே மாதிரியான கருத்துகளால் ஐ.சி.சி.-யை விமர்சித்துள்ளனர்.
நியூயார்க்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. முன்னதாக கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த உலகக்கோப்பையின் கணிசமான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
அதனாலேயே அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரில் இந்தியா 3 போட்டிகளில் விளையாடும் வகையில் ஐசிசி அட்டவணையையும் வடிவமைத்தது. ஆனால் அங்குள்ள மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக அல்லாமல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது.
ஏனெனில் அந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென் ஆப்பிரிக்கா அதை துரத்த 16 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. அதேபோல நேற்றைய போட்டியில் அயர்லாந்து அணி இந்தியாவிடம் அதிரடியாக விளையாட முடியாமல் 96 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த மைதானத்தின் மீது பலரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
இந்நிலையில் பொதுவாகவே எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய மைக்கேல் வாகன் மற்றும் வாசிம் ஜாபர் ஆகியோர் இந்த மைதானத்தை குறித்து ஒரே மாதிரியான கருத்துகளால் ஐ.சி.சி.-யை விமர்சித்துள்ளனர். அதில் டி20 போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை காண்பித்து அமெரிக்காவையே ஏமாற்றுகிறீர்களா என்ற வகையில் ஐசிசி'யை வாசிம் ஜாபர் எக்ஸ் பக்கத்தில் கலாய்த்துள்ளது பின்வருமாறு:-
"நியூயார்க்கின் பிட்ச் அற்புதமாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் மாறுவேடமிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி அமெரிக்க பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு நல்ல யோசனையாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
மைக்கேல் வாகன் கூறியுள்ளது பின்வருமாறு:- "மோசமான பிட்ச். கிரிக்கெட்டை பிரபலப்படுத்த முயற்சிப்பது சிறப்பானது. ஆனால் நியூயார்க் நகரில் சராசரி தரத்திற்கும் குறைவான பிட்ச்சில் வீரர்கள் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகக்கோப்பைக்கு கடினமாக உழைக்கும் நீங்கள் கடைசியில் இதில் விளையாட வேண்டியுள்ளது" என்று கூறினார்.