டி20 உலகக்கோப்பை: ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம் - இர்பான் பதான்
|டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் தற்போது சுமாரான பார்மில் இருப்பதாக இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார்.
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சனும், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஜெய்ஸ்வால் தற்போது சுமாரான பார்மில் இருப்பதாக இர்பான் பதான் கவலை தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக விராட் கோலியை, கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறக்கலாம் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
" இடது கை பேட்ஸ்மேன் என்பதால் ஜெய்ஸ்வால் உலகக்கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் தற்போது அவருடைய பார்ம் பற்றி இந்திய அணி இருமுறை யோசிக்க வேண்டியுள்ளது. எனவே இந்திய அணி நல்ல பார்மில் இருக்கும் விராட் கோலியை கேப்டன் ரோகித் சர்மாவுடன் களமிறக்கலாமா அல்லது அனுபவமற்ற இளம் வீரரான ஜெய்ஸ்வாலை பயன்படுத்தலாமா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
தற்போதைய நிலைமையில் ஜெய்ஸ்வால் பார்முக்கு வருவது அவசியம். அவருடைய ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே உலகக்கோப்பைக்கு முன்பாக அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நல்ல விஷயமாகும். ஆனால் அவருடைய தற்போதைய பார்ம் ராஜஸ்தான் அணிக்கே பின்னடைவை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
இர்பதான் பதான் கூறுவது போலவே நடப்பு சீசனில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.