டி20 உலகக்கோப்பை: ஐ.பி.எல். தொடர் இந்திய அணி தேர்வுக்கான அளவுகோலாக இருக்கக் கூடாது - ஸ்ரீகாந்த்
|ஐ.பி.எல். தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் தரத்தை மதிப்பிடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை,
9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் டி20 போட்டிகளில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக்கூடிய நட்சத்திர வீரர் விராட் கோலியை கழற்றிவிட்டு இளம் வீரர்களை தேர்வு செய்ய தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்தன. மேலும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்யக்கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடருக்கும் சர்வதேச தொடருக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் ஐ.பி.எல். தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் தரத்தை மதிப்பிடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன் தம்மை பொறுத்த வரை டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் நேரடியாக விராட் கோலி ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "யசஸ்வி ஜெய்ஸ்வால் என்னுடைய அணியில் இடம் பிடிப்பதற்கு வலுவான வீரர். ஆனால் தற்போதைய நிலைமையில் என்னை பொறுத்த வரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையில் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். ஏனெனில் 3, 4-வது இடத்தில் யார் பேட்டிங் செய்கிறார்? நீங்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை வைத்து அணியின் பேலன்சை பார்க்க வேண்டும்.
தேர்வுக் குழுவின் தலைவராக சில நேரங்களில் நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் நல்ல வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பான ரெக்கார்டை வைத்துள்ளார். ஆனால் என்னை பொறுத்த வரை விராட் மற்றும் ரோகித் ஓப்பனிங்கில் விளையாட வேண்டும். ஐ.பி.எல். தொடர் டி20 உலகக் கோப்பை தேர்வுக்கான அடிப்படை அளவுகோலாக இருக்கக் கூடாது. ஐ.பி.எல். என்பது சுட்டிக்காட்டும் இடமாகும்.
ஆனால் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் நீங்கள் சர்வதேச தரத்திற்கு நிகரான திறமைகளை பார்க்க வேண்டும். அதற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யார் வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் கடந்த கால செயல்பாடுகளையும் தற்போதைய பார்ம் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே ஐ.பி.எல். என்பதையும் ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் ஐ.பி.எல். மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடாது" என்று கூறினார்.