டி20 உலகக்கோப்பை: இந்தியா - கனடா ஆட்டம் நடந்தால் அவர்தான் ஆட்ட நாயகன் - ஆகாஷ் சோப்ரா
|டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - கனடா ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
புளோரிடா,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி விட்டது. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் பகுதியில் நடைபெறுகிறது. எனினும் இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மைதானம் ஈரமான நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக நேற்று நடைபெற இருந்த அமெரிக்கா அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டம் ரத்தானது. இதன்மூலம் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இந்த சூழலில் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை இன்று விளையாடுகிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,
"இன்றைய ஆட்டத்தில் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று நினைக்கின்றேன். இதற்கு காரணம் புளோரிடா ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு அபாயகரமானதாக இருக்காது என்று தெரிகிறது. இதுவே நியூயார்க் ஆடுகளமாக இருந்தால் நிச்சயமாக அனைத்து அணிகளையும் மிகவும் கவனத்துடன் எதிர் கொண்டு விளையாட வேண்டும். கனடா அணியால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என நினைக்கிறேன். இதனால் இந்தியா இன்றைய ஆட்டத்தில் நிச்சயமாக வெற்றி பெறும்.
இன்றைய ஆட்டம் நடந்தால் நிச்சயம் விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்று நான் நினைக்கின்றேன். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் ரன் குவிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். பந்துவீச்சில் குல்தீப் இன்று விளையாடினால் நிச்சயம் 3 விக்கெட்டுகள் எடுப்பார் என்று தோன்றுகிறது. இதேபோன்று ஜடேஜாவும் பார்முக்கு திரும்பி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்குவார் என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கின்றது.
ஷிவம் துபேவும் இழந்த பார்மை மீட்டு இருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காதா என்று பலரும் கேட்கிறார்கள். அவரை அணியில் சேர்த்தால் எந்த இடத்தில் விளையாட வைப்பீர்கள். ஆறாவது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடினால் அது நிச்சயம் அவருக்கு சரியான இடமாக இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது" என்று கூறினார்.