டி20 உலகக்கோப்பை: விக்கெட் கீப்பராக அவரை தேர்ந்தெடுக்க இந்தியா யோசிக்க கூடாது - கெவின் பீட்டர்சன்
|டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே.எல்.ராகுல், ஜித்தேஷ் சர்மா, துருவ் ஜூரெல் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் தகுதியாக உள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார். எனவே ஐ.பி.எல். தொடர் முடியும்போது டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் தயாராக இருப்பார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். அதனால் அவரை உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்க இந்தியா யோசிக்க கூடாது என்று பீட்டர்சன் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் நன்றாக வேலை செய்கிறார். குஜராத்துக்கு எதிராக விளையாடிய விதம் அவருக்கு பெரும் ஊக்கத்தை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய ஆட்டம் இந்திய அணிக்கும் ஊக்கமாக இருந்திருக்கும். மிகப்பெரிய காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவருக்கு போட்டிகளில் விளையாடுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது.
அவர் ஒரு மோசமான காயத்திலிருந்து திரும்பி வருகிறார். எனவே டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாக அவருக்கு 14 - 17 போட்டிகளில் விளையாடுவது அவசியம். அதற்கு ஐ.பி.எல். அவருக்கு உதவுகிறது. டி20 உலகக்கோப்பையில் விளையாட செல்வது பெரிய விஷயம். எனவே ஐ.பி.எல்.-ல் அதிக போட்டிகளில் விளையாடுவது ரிஷப் பண்ட் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருப்பதற்கான சூழலை உருவாக்கும். அந்த வகையில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை டி20 உலகக்கோப்பையில் தேர்ந்தெடுக்க இந்தியா யோசிக்க கூடாது" என்று கூறினார்.