< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: இந்தியா வெல்ல அந்த இருவருமே அணியில் இடம்பெற வேண்டும் - ஆர் பி சிங்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இந்தியா வெல்ல அந்த இருவருமே அணியில் இடம்பெற வேண்டும் - ஆர் பி சிங்

தினத்தந்தி
|
1 Jun 2024 11:52 AM IST

விராட் கோலி - ரோகித் சர்மா ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று ஆரம்பமாக உள்ளது. இதில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன் பின் 9-ம் தேதி நியூயார்க் நகரில் இந்தியா தங்களுடைய 2-வது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் ஓப்பனிங்கில் ரோகித் சர்மா - விராட் கோலி ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் இடது - வலது கை பேட்ஸ்மேன்கள் தேவை என்பதால் ரோகித் – ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்ற கருத்துகளும் காணப்படுகின்றன. அந்த சூழ்நிலையில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் - ரிஷப் பண்ட் ஆகியோரில் விளையாடப் போவது யார் என்ற கேள்வியும் காணப்படுகிறது. -

இந்நிலையில் விராட் கோலி - ரோகித் சர்மா ஓப்பனிங்கில் களமிறங்கினால் சஞ்சு மற்றும் ரிஷப் இருவருமே விளையாடலாம் என்று ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். இம்முறை கோப்பையை வெல்வதற்கான இந்திய அணியின் சிறந்த பேட்டிங் வரிசை பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"என்னைக் கேட்டால் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாட விரும்புகிறேன். 100 சதவீதம் சஞ்சு சாம்சன் 3-வது இடத்தில் விளையாட வேண்டும். அவர்கள் இருவருமே பிளேயிங் லெவனில் விளையாடலாம். அதன் பின் 4, 5, 6-வது இடங்களில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விளையாடலாம். இது அணியின் சேர்க்கையை பொருத்தது.

கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இது போன்ற வரிசையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் தொடரில் 4 ஓவர்கள் வீசி தம்மால் முடிந்ததை முயற்சித்தார். அது முக்கியம். அணியின் சமநிலை என்று வரும்போது பாண்ட்யாவின் செயல்பாடுகள் முக்கியமாக இருக்கும். ஆரம்பத்திலேயே அவர் நல்ல பார்மில் இருப்பது இந்திய அணிக்கு உதவும். கடந்த உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது 100 சதவீதம் இந்திய அணிக்கு உத்வேகத்தை மட்டுமே கொடுக்கும்.

ஏனெனில் கடைசியில் அவர்கள் ஒரு போட்டியில் மட்டுமே தோற்றனர். கடந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் நன்றாகவே இருந்தது. விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்றார். பொதுவாக பெரிய போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் அசத்துவார்கள். அந்த வகையில் விராட் கோலி எப்போதுமே பெரிய போட்டியில் அசத்தியுள்ளார். எனவே இம்முறையும் பெரிய தொடரில் இந்தியா நன்றாக விளையாடுவார்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்