< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து வென்றால் அதற்கு இந்தியாதான் காரணம் - நாசர் உசேன்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து வென்றால் அதற்கு இந்தியாதான் காரணம் - நாசர் உசேன்

தினத்தந்தி
|
1 Jun 2024 10:57 AM IST

இங்கிலாந்து கோப்பையை வென்றால் அதற்கு இந்தியாவின் ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக இருக்கும் என்று நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (இந்திய நேரப்படி 2-ம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாட உள்ளன. அதில் 2007-க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இம்முறையும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து வெளியேற்றிய இங்கிலாந்து இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதனால் நடப்பு சாம்பியனாக இங்கிலாந்து களமிறங்குகிறது.

மேலும் கேப்டன் ஜோஸ் பட்லர், வில் ஜேக்ஸ், பில் சால்ட், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ என அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி நல்ல பார்மில் உள்ளனர். இந்நிலையில் ஒருவேளை இம்முறையும் இங்கிலாந்து கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தால் அதற்கு இந்தியாவின் ஐபிஎல் தொடர் முக்கிய காரணமாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இங்கிலாந்து அணி முழுமையாக தயாராகி உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு ஐபிஎல் மிகப்பெரிய உதவியை செய்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

"இங்கிலாந்து சமநிலை கொண்ட அணியாக இருக்கிறது. அவர்கள் நிறைய பெரிய போட்டிகளில் விளையாடியுள்ளனர். நாம் ஐபிஎல் தொடர் பற்றியும் அது எப்படி மிகப்பெரிய வீரர்களை உங்களுக்கு உருவாக்குகிறது என்பதை பற்றியும் அதிகமாக பேசுவதில்லை. அழுத்தமான சூழ்நிலையில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் முன்னிலையில் அங்கே விளையாடி விட்டு நீங்கள் உலகக் கோப்பைக்கு வருகிறீர்கள். எனவே ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டு வருகின்றனர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்