டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றை இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ள உள்ளது..? - கேப்டன் ரோகித் தகவல்
|நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது.
ஆண்டிகுவா,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது.
லீக் சுற்றின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வரும் 20-ம் தேதி எதிர்கொள்கிறது. இதனையடுத்து 22-ம் தேதி வங்காளதேசத்தையும், 24-ம் தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட முடியும்.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சூப்பர் 8 சுற்றை எவ்வாறு எதிர்கொள்ள உள்ளது என்பது குறித்து தகவல் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது சூப்பர் 8 சுற்று ஆரம்பிக்க இருக்கின்றது. இதை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த சுற்றில் ஸ்பெஷலான விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொரு வீரருக்கும் இருக்கின்றது. இந்த சுற்றில் பெரிய ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றோம்.
இதனால் ஒவ்வொரு பயிற்சியையும் நாங்கள் உத்வேகத்துடன் மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் முதல் போட்டியை விளையாடிய பிறகு அடுத்த இரண்டு போட்டிகள் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் நடைபெறுகின்றன. இது நிச்சயம் எங்களுக்கு கடும் சவால்களை அளிக்கும். ஆனால் இதை எல்லாம் நாங்கள் ஏற்கனவே பழகி விட்டோம். இப்படி விளையாடுவதற்காக நாங்கள் பலமுறை பயணம் செய்திருக்கின்றோம். எனவே இதை ஒரு காரணமாக நாங்கள் சொல்ல மாட்டோம்.
அமெரிக்கா போல் இல்லாமல் வெஸ்ட் இண்டீசில் பல்வேறு மைதானங்களில் நாங்கள் ஏற்கனவே விளையாடி இருக்கின்றோம். இதனால் அந்த அனுபவம் எங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும். போட்டியின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வர ஒவ்வொரு வீரர்களும் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால் இந்த போட்டியை எதிர்கொள்ள மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறினார்.