டி20 உலகக்கோப்பை; இந்திய அணியின் துருப்புச்சீட்டு அவர்தான் - மேத்யூ ஹைடன்
|20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
மும்பை,
20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அனைத்து அணிகளும் தங்களது அணி விவரங்களை அறிவித்துவிட்டன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதேவேளையில் ரிங்கு சிங் ரிசர்வ் வீரராகவும், தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம் பெறாததும் பெரும்பாலான ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசக்கூடிய நடராஜன் இருந்திருந்தால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணியில் அற்புதமான சமநிலை இருக்கிறது. அவர்கள் 3 - 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலைகளுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். அமெரிக்காவைப் பற்றி தெரியாது. 3-வது இடத்தில் விராட் கோலியுடன், டாப் ஆர்டரில் இடது - வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களின் பேட்டிங் வரிசை நன்றாக இருக்கிறது.
ரோகித் சர்மா ஏற்கனவே பல பெரிய தொடர்களில் விளையாடிய செட்டிலான கேப்டனாக இருக்கிறார். பும்ரா, சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் வலுவான தேர்வு. இருப்பினும் இந்த அணியில் ஐ.பி.எல் தொடரில் டெத் ஓவர்களில் அசத்தி வரும் நடராஜன் போன்றவர் இருப்பதை பார்க்க விரும்புகிறேன். இருப்பினும் ஒட்டுமொத்தமாக இந்தியா சமநிலையுடன் கூடிய நல்ல அணியாகவே இருக்கிறது.
அவர்களிடம் உலக தரத்தில் புதுமையை கொண்ட பேட்ஸ்மேன்கள் இருப்பது பலமாகும். குறிப்பாக சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் ஆகியோர் மற்ற வீரர்களை விட வித்தியாசமான விஷயங்களை செய்யக்கூடிய திறமையை கொண்டுள்ளனர். அதே போல துருப்புச்சீட்டாக ரிஷப் பண்ட் உள்ளார். அவர் விளையாடுவது இந்திய அணிக்கு மிகப்பெரிய போனஸாகும். இவ்வாறு அவர் கூறினார்.