< Back
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை: கிளென் பிலிப்ஸ் போராட்டம் வீண்- நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை: கிளென் பிலிப்ஸ் போராட்டம் வீண்- நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

தினத்தந்தி
|
1 Nov 2022 5:08 PM IST

நியூசிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது.

பிரிஸ்மேன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப்1-ல் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,அலெக்ஸ் கேல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேல்ஸ் 52 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார். சிறப்பாக விளையாடிய பட்லர் 47 பந்துகளில் 73 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த மொயின் அலி (20 ரன்கள்), ஹாரி புரூக் (7 ரன்கள்), பென் ஸ்டோக்ஸ் (8 ரன்கள்) சோபிக்க தவறியதால் கடைசி 3 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் அந்த அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 179 ரன்கள் எடுத்தது.

இதை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் கான்வே, சாம் கரன் பந்துவீச்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பின் ஆலன் 16 ரன்களில் அவுட்டானார். அப்போது நியூசிலாந்து அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது.

இதை தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன்- கிளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். ஒரு பக்கம் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணி 14.5 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்திருந்த போது வில்லியம்சன் 40 ரன்களில் (40 பந்துகள்) ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கிட்டத்தட்ட 5 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய நீசம் ( 6 ரன்கள்) டேரில் மிச்சேல் ( 3 ரன்கள்) ஆட்டமிழந்தனர். 36 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார்.

இறுதி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட அந்த அணியால் 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இதனால் கிளென் பிலிப்ஸ் போராட்டம் வீணானது.

இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன், வோக்ஸ் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்டநாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் அந்த அணி குரூப் ஏ புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மேலும் செய்திகள்