டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: மழையால் ரத்து செய்யப்பட்டால் யார் சாம்பியன்..? விவரம்
|இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது.
பார்படாஸ்,
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி 2-வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
முன்னதாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நிறைய போட்டிகள் மழையால் ஆட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இந்தியா - கனடா உள்ளிட்ட சில ஆட்டங்கள் ரத்தும் செய்யப்பட்டன. அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து ஆட்டமும் 1 மணி நேரம் மழையால் பாதிக்கபட்டது.
இந்நிலையில் அரையிறுதியை போன்று இறுதிப்போட்டியையும் மழை அச்சுறுத்தினால் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை மோசமான வானிலையால் இரண்டு நாளிலும் முடிவு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் என்று அறிவிக்கப்படும். அதன்படி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இரண்டுமே சாம்பியனாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.