டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: கோலி ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியற்றவர் - இந்திய முன்னாள் வீரர்
|டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகன் விருதுக்கு விராட் கோலி தகுதியற்றவர் என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
விராட் கோலி அவ்வளவு மெதுவான ஒரு இன்னிங்ஸ் விளையாடியதன் மூலமாக, இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா விளையாடுவதற்கு இரண்டு பந்துகள் மட்டுமே கிடைத்தது. ஒரு பக்கம் இந்தியாவின் பேட்டிங் இதனால் நன்றாக இருந்தது என்று நினைத்தேன். ஆனால் அந்த போட்டியில் விராட் கோலி மெதுவாக விளையாடி இந்தியாவை இறுக்கமான இடத்தில் வைத்து விட்டார். கடைசி ஐந்து ஓவர்களுக்கு முன்பாக முக்கிய பந்துவீச்சாளர்கள் வருவதற்கு முன்னால் இது நிரூபிக்கப்பட்டது.
இந்தியா உறுதியாக தோற்கும் நிலையில் இருந்தது. தென் ஆப்பிரிக்கா 90 சதவீதத்துக்கு மேல் வெற்றி வாய்ப்பில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த இந்திய பந்துவீச்சாளர்கள்தான் விராட் கோலியை காப்பாற்றினார்கள். இந்த போட்டியில் ஒரு பந்துவீச்சாளர்தான் ஆட்டநாயகனாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் கையை விட்டுப் போன ஒரு போட்டியை திரும்ப இந்தியா பக்கம் எடுத்து வந்தார்கள். இவ்வாறு அவர் கூறினார்.