டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் துபேவுக்கு பதிலாக அவரை இறக்குங்கள் - ஸ்ரீசாந்த்
|ரோகித் சர்மா - விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளை சூப்பர் 8 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடப்பதால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடி வரும் ஷிவம் துபே மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஷிவம் துபே எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாதது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 3 ரன்களுக்கு அவுட்டாகி பின்னடைவு ஏற்படுத்தினார். அதை விட அப்போட்டியில் முகமது ரிஸ்வான் கொடுத்த எளிதான கேட்சை தவறவிட்டார். நல்லவேளையாக பும்ரா மற்றும் இதர பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் தடுமாறும் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை பிளேயிங் 11-ல் சேர்க்க வேண்டுமென ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா - விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாடலாம். அவர்களை மாற்றுவதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அக்சர் படேல் நன்றாக பந்து வீசுகிறார். இருப்பினும் ஷிவம் துபே முதல் 2 போட்டிகளில் நன்றாக செயல்படவில்லை. பேட்டிங்கில் அவர் என்ன செய்வார் என்பது நமக்குத் தெரியும். அதனால் இந்திய அணியில் நான் ஒரு மாற்றத்தை பார்க்க விரும்புகிறேன் சஞ்சு சாம்சன் அணிக்குள் வரவேண்டும்.
ஒருவேளை ஷிவம் துபே பந்து வீசவில்லையெனில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் எந்தளவுக்கு நன்றாக செயல்படுவார் என்பது நமக்குத் தெரியும். மற்றொரு நாளில் அவரிடம் நான் பேசினேன். அவர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். நல்ல பார்மில் இருக்கும் அவர் விக்கெட் கீப்பிங் தவிர்த்து சிறப்பாக பீல்டிங் செய்யக் கூடியவர். எனவே பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகியோருடன் மிடில் ஆர்டரில் அவர் விளையாடலாம் என்று நான் கருதுகிறேன். சேசிங் செய்யும்போது போட்டியை பினிஷிங் செய்வதற்கு நம்மிடம் சேஸ் மாஸ்டர் விராட் கோலி இருக்கிறார்" என்று கூறினார்.