டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வி - அரையிறுதி வாய்ப்பை இழந்த அமெரிக்கா?
|சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தான் விளையாடிய 2 ஆட்டங்களிலும் அமெரிக்கா தோல்வியை தழுவியுள்ளது.
பார்படாஸ்,
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் அமெரிக்கா இடம்பெற்றுள்ளது. அறிமுகம் ஆன முதல் உலகக்கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
இருப்பினும் அந்த அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில், இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது.
இன்னும் சூப்பர் 8 சுற்றில் வெற்றிக்கணக்கை தொடங்காத அந்த அணி, தனது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. அந்த ஆட்டத்தில் அமெரிக்கா மிகப்பெரிய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேவேளை வெஸ்ட் இண்டீஸ் தனது கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியை தழுவ வேண்டும். இது நடந்தால் மட்டுமே அமெரிக்கா அரையிறுதிக்கு முன்னேறும்.
இருப்பினும் அந்த அணியின் ரன்ரேட் மிக மோசமான நிலையில் இருப்பதால் அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.