< Back
கிரிக்கெட்
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - பென் ஸ்டோக்ஸ் விலகல்
கிரிக்கெட்

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - பென் ஸ்டோக்ஸ் விலகல்

தினத்தந்தி
|
3 April 2024 3:21 AM IST

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக உள்ளார். கடந்த நவம்பரில் இடது கால்முட்டி காயத்துக்கு ஆபரேசன் செய்த அவர் பிப்ரவரி- மார்ச்சில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு திரும்பினார். அந்த தொடரை 1-4 என்ற கணக்கில் இங்கிலாந்து பறிகொடுத்தது.

காயத்தில் இருந்து மீண்ட அவரால் இன்னும் முழுமையாக பந்து வீச முடியவில்லை. இந்திய தொடரில் கடைசி டெஸ்டில் வெறும் 5 ஓவர் மட்டும் பந்து வீசினார். ஏற்கனவே ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய பென் ஸ்டோக்ஸ், தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் மாதம் நடக்கும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

டி-20 உலகக் கோப்பை அணித்தேர்வுக்கு தனது பெயரை பரிசீலனை செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பென் ஸ்டோக்ஸ் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் முழுமையான ஆல்-ரவுண்டராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பந்து வீச்சில் நல்ல நிலையை எட்டுவதற்கு தொடர்ந்து கடினமாக உழைத்து வருகிறேன். இதற்காக ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை தியாகம் செய்கிறேன். இதன் மூலம் நான் முழு உடல்தகுதியுடன் குறிப்பிடத்தக்க ஆல்-ரவுண்டராக எதிர்காலத்தில் செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.

கோடை காலத்தில் நடக்கும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹம் அணிக்கு விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். டி-20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வகையில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட கேப்டன் ஜோஸ் பட்லர், பயிற்சியாளர் மேத்யூ மோட் ஆகியோருக்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்