டி20 உலகக்கோப்பை; எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் பும்ரா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் - தென் ஆப்பிரிக்க வீரர்
|20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான், வங்காளதேசத்தை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற அனுபவ வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி பற்றி பேசி இருக்கும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கூறியதாவது, பல சிறந்த இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் பேட்டராக இருப்பதால், பும்ரா தற்பொழுது மிகச் சிறப்பான நிலையில் இருப்பதாக நினைக்கிறேன்.
அவர் பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் எனக்கு மட்டும் இல்லாமல் எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.