டி20 உலகக்கோப்பை; தொடக்க ஆட்டத்தை தவறவிடும் வங்காளதேச வீரர்..? - வெளியான தகவல்
|வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணியை வரும் 8ம் தேதி எதிர்கொள்ள உள்ளது.
டல்லாஸ்,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி அமெரிக்கா வெற்றியை பதிவு செய்தது. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பப்புவா நியூ கினியாவை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் குரூப் டி-யில் இடம் பெற்றுள்ள வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 8ம் தேதி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இடது கையில் காயம் அடைந்த ஷோரிபுல் இஸ்லாமுக்கு ஆறு தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் குணமடைய குறைந்தது ஒரு வாரமாவது தேவைப்படும் என்றும், இதன் காரணமாக டல்லாஸில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.