டி20 உலகக்கோப்பை; பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற வங்காளதேசம்
|இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டல்லாஸ் ,
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் ஆடின.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 47 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி ஆடியது. வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் சவுமியா சர்கார் 0 ரன், தன்சித் ஹசன் 3 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து லிட்டன் தாஸ் மற்றும் ஷாண்டோ ஜோடி சேர்ந்தனர். இதில் ஷாண்டோ 7 ரன்னில் அவுட் ஆனார். இதன் காரணமாக தவ்ஹித் ஹ்ரிடோய் லிட்டன் தாஸூடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இதில் ஹ்ரிடோய் 20 பந்தில் 40 ரன் எடுத்த நிலையிலும் லிட்டன் தாஸ் 36 ரன்னிலும், அடுத்து வந்த ஷகிப் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்காளதேச 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஹ்ரிடோய் 40 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக நுவான் துஷாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலங்கை அணி தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளதால் அந்த அணியின் சூப்ப்ர் 8 சுற்று வாய்ப்பு கேள்வி குறியாகி உள்ளது.