டி20 உலகக் கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வங்காளதேசம்
|21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.
கிங்ஸ்டவுன்,
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் களமிறங்கியது.
19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்காளதேசம் அணி 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களும் மஹ்மதுல்லா மற்றும் ஹொசைன் தலா 13 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது.
அந்த அணியில் குஷால் மல்லா மற்றும் திபேந்திர சிங் சிறப்பாக விளையாடி இருவரும் முறையே 27 ரன்கள் மற்றும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆசிப் ஷேக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இந்த நிலையில் 19.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.