< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: ஒரு அணிக்கு மட்டும் அனைத்தும் சாதகம் - ஐ.சி.சி.யை விமர்சிக்கும் மார்க் புட்சர்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: ஒரு அணிக்கு மட்டும் அனைத்தும் சாதகம் - ஐ.சி.சி.யை விமர்சிக்கும் மார்க் புட்சர்

தினத்தந்தி
|
20 Jun 2024 11:37 AM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு மட்டுமே அனைத்தும் சாதகமாக கொடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி.யை மார்க் புட்சர் விமர்சித்துள்ளார்.

லண்டன்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாடுவதற்கு ஐசிசி அனுமதித்தது. அதன் காரணமாக சூப்பர் 8 சுற்றில் தரவரிசையில் டாப் 8 இடங்களில் உள்ள அணிகளுக்கு ஐ.சி.சி. முன்னுரிமை கொடுத்தது. அதாவது லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தை பிடிக்கிறார்கள் என்பதை தாண்டி சூப்பர் 8 சுற்றில் தரவரிசையில் டாப் இடங்களில் உள்ள அணிகள் மோதும் வகையில் ஐ.சி.சி. அட்டவணையை வடிவமைத்தது.

அதனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றில் மோதுவது லீக் சுற்றும் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே அனைவருக்கும் தெரிந்தது. ஏனெனில் தரவரிசையில் இவ்விரு அணிகளும் முதல் 2 இடங்களில் உள்ளன. அதை விட ஒருவேளை இந்தியா அரையிறுக்கு தகுதிபெற்றால் 2-வது அரையிறுதியில்தான் விளையாடும் என்று ஐசிசி பிரேத்யேக அறிவிப்பை வெளியிட்டது.

ஏனெனில் கயானா நகரில் நடைபெறும் 2-வது அரையிறுதிதான் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஒருவேளை டிரினிடாட் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா விளையாடினால் அதிகாலை 6 மணிக்கு ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். அதற்காக இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது. இதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இங்கே ஒரு அணிக்கு மட்டும் சூப்பர் 8 சுற்றில் எந்த குரூப்பில் விளையாடுவோம், அரையிறுதி எங்கே நடைபெறும் என்பது தெளிவாக தெரிகிறது. ஒரு தொடரை இப்படி நீங்கள் எப்படி நடத்த முடியும்? ஏனெனில் ஒரு அணிக்கு மட்டும் அரையிறுதி எங்கே எப்போது எந்த தேதியில் விளையாடுவோம் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் எதிரணிக்கு அதைப் பற்றிய ஐடியாவே தெரியாது. இது ஆச்சரியமளிக்கிறது.

இதற்கான காரணம் என்னவெனில் இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் அதிக பணம் கட்டுவதால் போட்டியை காண்பிப்பதற்கான சாத்தியம் கொடுக்கப்படுகிறது. அதே காரணத்தால் அரையிறுதிக்கு சென்றால் எங்கே விளையாடுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. இது பற்றி வர்ணனையாளர்கள் பேச மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஐசிசிக்கு வேலை செய்கின்றனர். ஒருவேளை இதை விமர்சித்தால் அவர்களுக்கு தடை விதிக்கப்படும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்