< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: சிஎஸ்கே வீரர் புறக்கணிப்பு...தேர்வுக்குழு எடுக்கும் முடிவு ஆச்சரியப்பட வைக்கிறது - ஆகாஷ் சோப்ரா
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: சிஎஸ்கே வீரர் புறக்கணிப்பு...தேர்வுக்குழு எடுக்கும் முடிவு ஆச்சரியப்பட வைக்கிறது - ஆகாஷ் சோப்ரா

தினத்தந்தி
|
11 Dec 2023 3:45 AM GMT

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி, ராகுல், பும்ரா, ஷமி ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில் இந்த தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்த ஹர்த்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சிஎஸ்கே அணியை சேர்ந்த ஷிவம் துபேவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தாலும் எந்த ஒரு போட்டியிலும் அவர் களமிறங்காதது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஷிவம் துபே தேர்வு செய்யப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்திய அணியின் தேர்வுக்குழு எடுக்கும் முடிவுகள் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சிவம் துபேவை இந்தியா தேர்வு செய்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 17 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் அளிக்கவில்லை. இதை ஒரு வீரருக்கு எவ்வாறு தெரிவிப்பது?. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்