ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா சேர்ப்பு
|இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
புதுடெல்லி,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிங்கு சிங், அவேஷ் கான் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலும் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரு போட்டிகளுக்கு யஷஸ்வி ஜெய்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.