தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் விலகல்...!
|ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி20 தொடர் நிறைவடைந்த பின்னர் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதை முன்னிட்டு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் டி20 தொடருக்கான அணியிலிருந்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.