டி20 தரவரிசை: ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஹர்திக் பாண்ட்யா
|டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
துபாய்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் தற்போது ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் 797 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் ஜெய்ஸ்வால் 7வது இடத்திலும், ருதுராஜ் கெய்க்வாட் 20வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் 718 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அன்ரிச் நோர்ட்ஜே 7 இடங்கள் உயர்ந்து 675 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
இலங்கையின் வனிந்து ஹசரங்கா (674 புள்ளி) 3வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (668 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளனர். இந்தியா தரப்பில் அக்சர் படேல் (657 புள்ளி) 7வது இடத்திலும், குல்தீப் யாதவ் (654 புள்ளி) 8வது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா (640 புள்ளி) 12வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் (635 புள்ளி) 13வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (222 புள்ளி) 2 இடம் உயர்ந்து இலங்கையின் வனிந்து ஹசரங்காவுடன் (222 புள்ளி) முதல் இடத்தை பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (211 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் அக்சர் படேல் 164 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளார்.