டி20 தரவரிசை: பேட்ஸ்மேன்களில் கெய்க்வாட் நல்ல முன்னேற்றம்.. ஆல் ரவுண்டர்களில் பாண்ட்யா சரிவு
|டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
துபாய்,
இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். 2-வது போட்டியில் 77 ரன்கள் அடித்ததன் மூலம் 20-வது இடத்தில் இருந்த அவர் 13 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டாப் 10 பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியா தரப்பில் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் (2-வது இடம்) மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. ஆனால் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஹர்திக் பாண்ட்யா 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அவருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்த ஹசரங்கா தற்போது தனி வீரராக முதலிடத்தில் உள்ளார்.