டி20 கிரிக்கெட்; 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா
|டி20 கிரிக்கெட் போட்டியில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
பர்மிங்காம்,
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதன்படி, விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர்.
இதில், ரோகித் சர்மா 2 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசினார். அவர் 31 ரன்கள் (20 பந்துகள்) எடுத்து வெளியேறினார். இந்த போட்டியில் அவர் அடித்த பவுண்டரிகளால் புதிய சாதனை படைத்து உள்ளார். மொத்தம் 301 பவுண்டரிகளை அவர் இதுவரை அடித்துள்ளார்.
இதனால், டி20 கிரிக்கெட் போட்டியில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அவர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி விட்டு (298 பவுண்டரிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
இந்த பட்டியலில், அயர்லாந்து கிரிக்கெட் வீரர் பால் ஸ்டெர்லிங் மொத்தம் 325 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் ரோகித் உள்ளார். விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்.
இந்த போட்டியில், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 17வது ஓவர் முடிவில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.