சூர்யகுமார் யாதவ் அரைசதம்; அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி
|இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார்.
நியூயார்க்,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் விராட் கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மறுபுறம் ரோகித் 3 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில் பண்ட் 18 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்த போது இந்தியாவுக்கு பெனால்டி முறைப்படி 5 ரன்கள் வழங்கப்பட்டது.
அமெரிக்க அணி இந்த இன்னிங்ஸில் 3 முறை புதிய ஓவரைத் தொடங்க 60 வினாடிகளைக் கடந்துள்ளனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு பெனால்டி முறைப்படி 5 ரன்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியினர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியில் இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.