ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கொடுக்க வேண்டும் - விளக்கம் அளித்த ரிக்கி பாண்டிங்...!
|உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வீரர் சூர்யகுமார் யாதவ் என கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஒருநாள் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில், உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வல்லமை கொண்ட வகையிலான வீரர் அவர் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
அனைத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் தங்கள் கிரிக்கெட் கேரியரில் இது மாதிரியான மோசமான கட்டத்தை கடந்து வந்தவர்கள் தான். என்ன ஒரே தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் முதல் பந்தே டக் அவுட் ஆனதை நான் பார்த்தது இல்லை என நினைக்கிறேன்.
ஆனால், அதற்கு முன்னர் சூர்யகுமாரின் அந்த 12 அல்லது 18 மாத கால கிரிக்கெட் ஆட்டத்தைப் பாருங்கள். அது அபார ரகம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை உலகம் அறியும். அதனால் தான் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவர் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
உலகக் கோப்பையை வென்று கொடுக்கும் வகையிலான வல்லமை கொண்ட வீரர் அவர். இப்போது அவரது ஆட்டத்தில் கன்சிஸ்டன்ஸி இல்லாமல் இருக்கலாம். பெரிய ஆட்டத் தருணங்களில் வென்று கொடுக்கும் திறன் கொண்டவர். கிட்டத்தட்ட மறைந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணிக்கு செய்ததை அவரும் செய்வார். அவர் ஒரு மேட்ச் வின்னர். 5-வது பேட்ஸ்மேனாக அவர் களம் காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளிலும் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தார் சூர்யகுமார் யாதவ். அவரது பார்ம் குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்தை சொல்லி வரும் நிலையில் பாண்டிங் அவருக்கு ஆதரவாகப் பேசி உள்ளார்.
ஹர்திக், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் போன்றவர்கள் லோயர் ஆர்டரில் அசத்துவார்கள் என்றும். அதே போல உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் இல்லாத காரணத்தால் கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக விளையாடுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும். கிஷன், இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும். அணியில் ஒரு பேலன்ஸ் வேண்டி அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.