ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
|டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கும் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே.
துபாய்,
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த 25ஆம் தேதி நடந்த கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதை தொடர்ந்து ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் (801 ரேட்டிங் புள்ளி) 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் வெளியான டி20 பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் தற்போது பாபருடன் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ரமையும் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கும் ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மட்டுமே. இதில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (861 ரேட்டிங் புள்ளி) உள்ளார். சூர்யகுமாரை தவிர இந்திய வீரக்களில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 13-வது இடத்திலும் கோலி 15-வது இடத்திலும் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.