சர்பராஸை நான் காண வந்ததற்கு சூர்யகுமார்தான் காரணம் - சர்பராஸ் கானின் தந்தை நவுஷத் கான்
|இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுக வீரராக களம் இறங்கினார்.
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களும், அறிமுக வீரர் சர்பராஸ் கான் 62 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர். ரவீந்திர ஜடேஜா 110 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்த்தில் சர்பராஸ் கான் அறிமுகமானதை அடுத்து அவரது தந்தை நவுஷத் கான் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்நிலையில் ராஜ்கோட்டில் சர்பராஸை நான் காண வந்ததற்கு சூர்யகுமார்தான் காரணம் என சர்பராஸ் கானின் தந்தை நவுஷத் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
சூர்யகுமார் யாதவ்தான் என்னை ராஜ்கோட் ஆட்டத்தில் கலந்து கொள்ளச் சொன்னார். எனக்கு ராஜ்கோட் வரும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை என்பதை என் குரலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
சூர்யகுமார் யாதவ், என்னிடம் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டார். அதற்கு, நான் அங்கு இருக்கும் அழுத்தத்தை சர்பராஸ் உணர விரும்பவில்லை என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு சூர்யகுமார் நீங்கள் ராஜ்கோட்டுக்கு செல்லுங்கள். இது போன்ற தருணங்கள் மறுபடியும் கிடைக்காது. வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும் என்றார். அதன் பின்னர் தான் நான் ராஜ்கோட்டிற்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.