சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமடைந்தேன் - ஹர்பஜன் சிங்
|சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்ற பின்னர் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் இது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி காரணமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக கொண்டு வந்தபோது ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்தேன் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சூர்யகுமார் யாதவை இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக கொண்டு வந்தபோது நான் ஆச்சரியமடைந்தேன். எனக்கு அந்த முடிவு ஏமாற்றமாகவும் இருந்தது. அவர் (பாண்ட்யா) டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார். ரோகித் சர்மா ஓய்வு பெற்றதும் அவர் இயல்பாக கேப்டனாக வரவேண்டும்.
ஆனால் நீங்களோ உடல் தகுதியை காரணம் காட்டி அவரை கேப்டன் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால் அவர் துணை கேப்டனாகவும், கேப்டனாகவும் இருந்திருக்கிறார். டி20 உலக கோப்பையை வென்று விட்டு வந்ததும் இப்படியான முடிவு பெரிய பின்னடைவாக அவருக்கு அமைந்தது. இது சரியான ஒன்று கிடையாது. சூர்யகுமார் யாதவ் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் மிகவும் திறமையானவர் மேலும் தன்னலமற்றவர். ஆனாலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.