அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது - முகமது ஷமி
|இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக ஜொலித்தவர் ஷமி.
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி இருந்தார் ஷமி. அதன்பின் இடது கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ஜனவரி கடைசி வாரத்தில் லண்டனில் சிகிச்சை எடுத்த ஷமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாகவும் அதன்பின் அவரால் சிறிது ஓட முடிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரது காயம் கவலைக்குரிய வகையில் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் சமீபத்தில் தகவல் தெரிவித்த நிலையில், ஷமிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக முகமது ஷமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதை எதிர்நோக்கியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.