'140 கோடி மக்களின் ஆதரவு உள்ளது' - இந்திய கிரிக்கெட் அணிக்கு அமித்ஷா வாழ்த்து
|உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
புதுடெல்லி,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில், "கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாழ்த்துகள். உங்களை உற்சாகப்படுத்த 140 கோடி இந்தியர்கள் உள்ளனர். நன்றாக விளையாடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், "உலகக்கோப்பை தொடர் முழுவதிலும் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் 140 கோடி மக்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு உள்ளது. அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உலகக்கோப்பையை பெற்று வாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.