ஒற்றை காலில் விளையாடினாலும் ரிஷப் பண்ட் அணியில் இடம்பெற வேண்டும் - சுனில் கவாஸ்கர்
|ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வுக்குழு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரை விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்துள்ளது.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் விராட் கோலி மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கேஎல் ராகுல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பராக மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரை இத்தொடரில் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்துள்ளது. ஆனாலும் இதுவரை பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டிராத அவர்கள் இன்னும் தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக நிரூபிக்கவில்லை.
அது போன்ற சூழ்நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருவேளை முழுமையாக குணமடையாமல் ஒற்றை காலில் வந்தாலும் கேஎல் ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-
"கேஎல் ராகுலையும் நான் விக்கெட் கீப்பராக பார்க்கிறேன். ஆனால் அதற்கு முன்பாக ஒருவேளை ரிஷப் பண்ட் ஒரு காலில் விளையாடும் அளவுக்கு ஓரளவு பிட்டாக இருந்தாலும் அவர் அணிக்குள் வரவேண்டும். ஏனெனில் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேம் சேஞ்சராக செயல்பட கூடியவர். எனவே நான் தேர்வுக்குழுவில் இருந்தால் அவருடைய பெயரைத்தான் முதலில் போடுவேன். ஒருவேளை பந்த் தயாராகவில்லையெனில் கேஎல் ராகுல் கீப்பராக செயல்படலாம்.
அவர் கீப்பராக செயல்படுவது சமநிலையையும் ஏற்படுத்தும். மேலும் அவரை நீங்கள் துவக்க வீரராக அல்லது மிடில் ஆர்டர்களில் அல்லது பினிஷராக கூட பயன்படுத்தலாம். தற்போது அவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் நல்ல முன்னேற்றத்தை கண்டு முழுமையான விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு வீரர்களிடம் போட்டி இருப்பது நல்லதாகும். ஜிதேஷ் சர்மாவும் அதிரடியாக விளையாடி பினிஷிங் செய்யக்கூடியவர்" என்று கூறினார்.