கோலியை கட்டியணைத்த கம்பீர்...ஆஸ்கரே கொடுக்கலாம் என்ற இந்திய முன்னாள் வீரர்
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
பெங்களூரு,
ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் மைதானத்தில் மயான அமைதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. போட்டியின் (டைம் அவுட்) போது களத்திற்கு வந்த கம்பீர் கோலியை கட்டியணைத்தார்.
இது தொடர்பான வீடியோவை தனியார் நிறுவனம் மீண்டும் ஒளிபரப்பியது. அப்போது வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரவி சாஸ்திரி, கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டது கே.கே.ஆர். அணிக்கு பேர்பிளே (Fairplay) விருது கிடைக்க உதவியாக இருக்கும், என்று தெரிவித்தார்.
இதை கேட்ட சுனில் கவாஸ்கர், பேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம், என்று தெரிவித்தார். விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.