< Back
கிரிக்கெட்
சுப்மன் கில் அதிரடி சதம்...குஜராத் 188 ரன்கள் குவிப்பு...!

Image Courtesy: @IPL

கிரிக்கெட்

சுப்மன் கில் அதிரடி சதம்...குஜராத் 188 ரன்கள் குவிப்பு...!

தினத்தந்தி
|
15 May 2023 3:50 PM GMT

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன.

அகமதாபாத்,

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 61 லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் இன்னும் எந்த அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. டெல்லி அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது.

இந்நிலையில், தொடரில் இன்று நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறும் முனைப்பில் குஜராத் அணியும், இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்ற நிலையில் ஐதராபாத் அணியும் ஆடி வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சஹா ரன் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.

இதையடுத்து சுப்மன் கில்லுடன் தமிழக வீரர் சாய் சுதர்சன் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அரைசதத்தை நெருங்கிய வேளையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுதர்சன் 47 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஹர்த்திக் பாண்ட்யா 8 ரன்னிலும், மில்லர் 7 ரன்னிலும், திவேட்டியா 3 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

ஒருபுறம் நிலையான மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 56 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் சதம் அடித்த நிலையில் 101 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரஷீத் கான் டக் அவுட் ஆனார்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்