2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு சுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் - இந்திய முன்னாள் வீரர்
|2023 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு சுப்மன் கில் போட்டியாளராக இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின்னர் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அணியை கட்டமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அந்த அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து வீரர்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தும், அவர்களை எந்த வரிசையில் களம் இறங்கினால் சரியாக இருக்கும் என நினைத்தும் அவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போதையை நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ரோகித், தவான், ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். இதில் கேப்டன் என்ற வகையில் முதலாவது தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா இருப்பார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு ராகுல் மற்றும் தவான் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஒருநாள் போட்டியை பொறுத்தவரை தவானுக்கே அதிக வாய்ப்பு உள்ளது.
மற்றபடி 3வது வரிசையில் விராட் கோலி, 4வது வரிசையில் ஆட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே போட்டி நிலவுகிறது. 5வது இடத்துக்கு பண்ட் இருக்கிறார், ஆனால் தொடக்க ஆட்டக்காரராக ரோகித்துடன் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டால் ராகுல் 5வது இடத்துக்கு பண்ட்டுடன் போட்டியிடுவார் என தெரிகிறது.
இந்நிலையில், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கான போட்டியில் இந்த இளம் வீரர் இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
சுப்மன் கில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார், தொடர்ந்து செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். 2023 உலகக்கோப்பை தொடருக்கு தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு அவர் ஒரு போட்டியாளராக இருப்பார் என நான் நினைக்கிறேன். "சுப்மான் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த வீரராக திகழ்வார்' என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.