சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் விரைவில் ரன் குவிக்க தொடங்கி விடுவார்கள் - விக்ரம் ரத்தோர்
|இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
விசாகப்பட்டினம்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதில் ஐதராபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் இரு இன்னிங்சிலும் சொதப்பினார். தனது கடைசி 11 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்காத சுப்மன் கில் விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும் 2-வது டெஸ்டில் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.
இதையொட்டி இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நமது அணியில் இளம் பேட்டர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. எனவே அவர்கள் விஷயத்தில் நாம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ரன் குவிக்க தொடங்கி விடுவார்கள். நிச்சயம் இது நடக்கும்.
மனஉறுதியுடன் நிலைத்து நின்று ஆடுவதற்கும், தாக்குதல் பாணியில் விளையாடுவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. இந்திய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் தீர்க்கமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம் ரன் எடுக்க கிடைக்கும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலையை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப இங்கு எப்படி விளையாட வேண்டும், எந்த மாதிரி அடித்தால் இந்த ஆடுகளத்தில் நன்றாக இருக்கும் என பேட்ஸ்மேன்கள் சாதுர்யமாக சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம்' என்று கூறினார்.