விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக மனம் திறந்த சுப்மன் கில்
|இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு,
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணி சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், ஒருநாள் அணி ரோகித் சர்மா தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அத்துடன் சுப்மன் கில்லை அவர் புதிய துணை கேப்டனாக தேர்ந்தெடுத்தது பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் கேப்டனாக விளையாடிய சுப்மன் கில் சுயநலத்துடன் நடந்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ள சுப்மன் கில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தம்முடைய செயல்பாடுகள் எதிர்பார்ப்புக்கு நிகராக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் இந்தியா விளையாட உள்ள 30 - 40 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி தம்முடைய தரத்தை முன்னேற்றி காட்டுவேன் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து விளையாடுவது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
"இந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பைக்கு முன்பு வரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் என்னுடைய செயல்பாடுகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இருப்பினும் முன்னோக்கிச் செல்லும் போது அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் 30 - 40 போட்டிகளில் விளையாட உள்ளோம் என்று நினைக்கிறேன். எனவே அவற்றைப் பயன்படுத்தி என்னுடைய பேட்டிங்கில் நான் முன்னேற்றத்தை சந்திப்பேன். அத்துடன் அணியாகவும் நாங்கள் முன்னேறுவோம்.
ஜெய்ஸ்வாலும் நானும் மகிழ்ச்சியுடன் ஒன்றாக பேட்டிங் செய்கிறோம். குறிப்பாக ஷாட்டுகளை அடிப்பதில் நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம். இடது - வலது கை ஜோடியான நாங்கள் இதற்கு முன் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் 2 முறை 150- ரன்களுக்கு மேற்பட்ட பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். எனவே எங்களுக்குள் நல்ல தொடர்பு இருக்கிறது. அவருடன் பேட்டிங் செய்வது வேடிக்கையாக இருக்கும்" என்று கூறினார்.