சுப்மன் கில் கேப்டன் பதவியை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார் - பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்
|ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
அகமதாபாத்,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை அதிகப்படுத்த சென்னை அணி கடுமையாக போராடும்.
இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சுப்மன் கில் கேப்டனாக கைதேர்ந்து வளர சிறிது காலம் ஆகும். ஆனால் அவர் இந்த சீசனை கேப்டனாக மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறார். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர்.
அவர் அடுத்த மூன்று போட்டிகளில் நிச்சயம் இரண்டு மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் அவர் பேட்டிங்கில் ஜொலிப்பார். எங்களது அணியில் முகமது ஷமி தற்போது இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் ஷமியை மிஸ் செய்கிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எங்களுக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். ஷமி போன்ற வீரரின் இடத்திற்கு வேறு ஒருவர் வருவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். பவர் பிளேவில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எங்கள் அணியில் இளம் பவுலர்கள் தான் இருக்கிறார்கள். சிக்ஸர்கள் அடிக்கும் பேட்ஸ்மன்களுக்கு எதிராக அவர்கள் தங்களுடைய ஆட்டத்தை சரி செய்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும்.
அகமதாபாத் ஆடுகளம் முதலில் கொஞ்சம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு எங்களுடைய வீரர்கள் முதலில் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆட்டமே மாறிவிடும். நாங்கள் எப்போதும் போல் விளையாடும் கிரிக்கெட்டை நடப்பு சீசனில் விளையாடவில்லை. கடந்த காலங்களில் இருந்த விளையாட்டுத் திறன் இந்த சீசனில் எடுபடவில்லை.
எனினும் கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் நல்லது கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நாளை (இன்றைய) ஆட்டத்தில் பவர் பிளே மிகவும் முக்கியம். அதில் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.