< Back
கிரிக்கெட்
சுப்மன் கில் பீல்டிங் செய்ய களத்திற்கு வராததற்கு காரணம் என்ன? - பி.சி.சி.ஐ. விளக்கம்
கிரிக்கெட்

சுப்மன் கில் பீல்டிங் செய்ய களத்திற்கு வராததற்கு காரணம் என்ன? - பி.சி.சி.ஐ. விளக்கம்

தினத்தந்தி
|
5 Feb 2024 10:49 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

இதனையடுத்து 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3-வது நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் சுப்மன் கில் பீல்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. இது இந்திய ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கமளித்த பி.சி.சி.ஐ., தனது எக்ஸ் பக்கத்தில், '2-வது நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது சுப்மன் கில்லின் வலது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இன்று அவர் களத்தில் இறங்கமாட்டார்' என்று பதிவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்