< Back
கிரிக்கெட்
மும்பை அணிக்காக சுப்மன் கில் நன்றாக பேட்டிங் ஆடினார் - சச்சின் டெண்டுல்கர்

Image Courtesy: shubmangill /TWITTER

கிரிக்கெட்

'மும்பை அணிக்காக சுப்மன் கில் நன்றாக பேட்டிங் ஆடினார்' - சச்சின் டெண்டுல்கர்

தினத்தந்தி
|
22 May 2023 8:29 AM IST

சுப்மன் கில் மற்றும் கேமரூன் க்ரீன் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர் என சச்சின் கூறியுள்ளார்.

மும்பை,

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

நாளை நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்-சென்னை அணிகள் சென்னையில் மோத உள்ளன. தொடரில் 4வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது. அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு கோலியின் அதிரடி சதத்தால் 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்