டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகள்..!! இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் சாதனை
|டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனை படைத்துள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5வது இடத்தில் அவர் உள்ளார்.
மான்செஸ்டர்,
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அனல் பறக்கும் இந்த தொடரில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், திரில்லிங்கான 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றியை ருசித்தன. தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் வார்னர் மற்றும் கவாஜா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் தொடக்க வீரர் கவாஜா 3 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் ஸ்டுவர்டு பிராட் தனது 599-வது விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், பிராட் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயல, அந்த பந்து ஜோ ரூட்டிடம் கேட்சாக மாறியது. பிராட் தனது 166வது டெஸ்டில் முதல் இன்னிங்சின் 50வது ஓவரில் 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை ஸ்டுவர்டு பிராட் படைத்துள்ளார். இதில் 394 விக்கெட்டுகள் இங்கிலாந்திலும், 206 விக்கெட்டுகள் வெளிநாடுகளிலும் எடுக்கப்பட்டவை ஆகும்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இவருக்கு முன் 600 விக்கெட்டுகளை சக நாட்டு வீரர் ஆண்டர்சன் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் 708 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் ஷேன் வார்னேவும், 688 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் ஆண்டர்சனும், 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே 4வது இடத்திலும் உள்ளனர்.