< Back
கிரிக்கெட்
விக்கெட்டுகளை இழந்து திணறல்... தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

விக்கெட்டுகளை இழந்து திணறல்... தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து

தினத்தந்தி
|
18 Feb 2024 4:07 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 557 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ராஜ்கோட்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தனது 2வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 65 ரன்னுடனும், குல்தீப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் (ரன் அவுட்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறிய ஜெய்ஸ்வால் களமிறங்கினார். மறுபுறம் குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சர்பராஸ் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார். மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியை தொடங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231பந்துகளில் (14 பவுண்டரி , 10 சிக்சர் ) இரட்டை சதமடித்து அசத்தினார்.

இந்திய அணி 98 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 445 ரன்கள் எடுத்து 556 ரன்கள் முன்னிலையுடன் இருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

அந்த அணி வீரர்கள் ஜாக் கிராலி 11 ரன்களிலும், டக்கெட் 4 ரன்களிலும், ஒல்லி போப் 3 ரன்களிலும், ஜோ ரூட் 7 ரன்களிலும், பேர்ஸ்டோ 4 ரன்களிலும், கேப்டன் ஸ்டோக்ஸ் 15 ரன்களிலும், ரெஹன் அகமது ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் மற்றும் பும்ரா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது வரை இங்கிலாந்து 53 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடுகிறது. டாம் ஹார்ட்லி மற்றும் பென் போக்ஸ் களத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்